அரசியல்
காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக, தொண்டராகவே தனது பொதுவாழ்க்கை ஆரம்பித்தார். எப்போதுமே சாதாரண வேட்டி, அரைக்கை சட்டை, ரப்பர் செருப்பு ஆகியவற்றையே அணிவார்.
1956 முதல் 1972 வரை அவர் நிர்வகித்த சந்திரசேகரபுரம் கூட்டுறவுப் பண்டகசாலை நாட்டிலேயே சிறந்த கூட்டுறவு அமைப்புக்கான விருதைப் பெற்றது.
காங்கிரஸ் கட்சியில் 1976-80இல் மாநிலத் தலைவர்; 1980-88இல் அகில இந்தியப் பொதுச் செயலாளர்; 1988-89இல் மீண்டும் மாநிலத் தலைவர், 1989-91இல் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்; 1977-1989 வரை மாநிலங்களவை உறுப்பினர்; 1996 முதல் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இயல்பு கொண்டவர். கட்சியின் செல்லப்பிள்ளை. இவரை காமராஜர் எப்போதும் ‘அம்பி’ என்றே அழைப்பார்.
கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவராக இவர் பொறுப்பேற்ற பின்னர் அது காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் புகுந்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் இணைந்தார். மத்திய அமைச்சர் போன்ற பதவிகள் மூப்பனாரைத் தேடி வந்த போதும் பதவிகளை அவர் விரும்பவில்லை.